Close

மாவட்டம் பற்றி

முன்னுரை:

ஈரோடு மாவட்டம் தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் கர்நாடக மாநிலத்தினை ஒட்டி அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்கள் அமைந்துள்ளன. தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும், மேற்கில் திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டமும் அமைந்துள்ளன. ஈரோடு மாவட்டம், முக்கியமான பகுதியில், கடற்கரை ஏதும் இல்லாத நிலப்பகுதியாக அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் 10.36” மற்றும் 1158” வடக்கு அட்ச ரேகைக்கும், 76.49” மற்றும் 77.58” கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடையில் அமைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அமைந்துள்ள நிலப்பகுதி சமநிலப் பகுதியாகவும், தென்திசை நோக்கியும், தென்கிழக்கு திசையில் காவேரியாற்றினை நோக்கியும் சிறிது சாய்வாகவும் அமைந்துள்ளது. காவேரியாற்றின் முக்கிய கிளை நதிகளான பவானி மற்றும் நொய்யல் மற்றும் பாலாறு ஆறுகள் இம்மாவட்டத்தின் பெரும் பகுதி நிலங்கள் வழியாக பாய்கின்றன. பவானி , பாலாறு மற்றும் நொய்யல் ஆறுகள் இம்மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள மலைகளில் இருந்து உற்பத்தியாகி ஈரோடு மாவட்டத்தில் பாய்கின்றன. காவேரி ஆறு ஈரோடு மாவட்டத்திற்கு கிழக்கு எல்லையாகவும் விளக்குகிறது. காவேரி ஆறு ஈரோடு மாவட்டத்திற்கும் நாமக்கல் மாவட்டத்திற்கும் எல்லையாக விளங்கி, தென்திசை நோக்கி பாய்ந்து செல்கிறது. மாவட்டத்தின் வடக்கில் இம்மாவட்டத்திற்கும் கார்நாடகத்திற்கும் எல்லையாக பாலாறு பாய்கின்றது.

ஈரோடு மாவட்டத்தின் சுருக்கமான முன்வரலாறு:

ஈரோடு மாவட்டம் கோயமுத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இம்மாவட்டத்தின் முன்வரலாறு கோயமுத்தூர் மாவட்டத்துடன் பின்னிப்பினைந்துள்ளது.  ஈரோடு மாவட்டத்திற்கு என தனியே வரலாற்றினை பிரித்துப் பரர்ப்பது மிகவும் கடினமானதாகவே இருக்கும்.  ஈரோடு மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்கள் இணைந்த நிலப்பகுதி முற்காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.  கொங்கு மண்டலம் வரலாறு சங்ககால வரலாற்றுடன் இணைந்ததாகும்.  முற்காலத்தில், இந்த நிலப்பகுதி மலைவாழ் மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்துள்ளது.  இவர்களில் மிக முக்கியமானவர்கள் “கோசார்கள்” இவார்களது தலைநகரமாக கோசம்புத்தூர் இருந்து வந்துள்ளது.  கோசம்புத்தூர் என்பது நாளாவட்டத்தில் கோயம்புத்தூராக அழைக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது.  இம்மலைவாழ் மக்கள் ராஷ்டிரார்களால் தோற்கடிக்கப்பட்டனார்.  ராஷ்டிரர்களிடமிருந்த இப்பகுதி ராஜராஜ சோழர் ஆட்சிக்காலத்தில் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது.  சோழ சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்த பின்னர் கொங்கு மண்டலம் சாளுக்கியார்கள் வசமும், பாண்டியார்கள், ஹெய்ச்சாளர்கள் ஆகியோர்களின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளது.. பாண்டிய அரசாங்கத்தில் ஏற்பட்ட உள்விலகல்களினாலும் டில்லியில் இருந்து வந்த முஸ்லீம் ஆட்சியாளார்கள் தலையீட்டினாலும் இப்பகுதி மதுரை முஸ்லீம் ஆட்சியாளர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. இதன் பின்னர் முஸ்லீம் ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு இப்பகுதி விஜய நகர மன்னரால் தனது ஆளுமையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் இப்பகுதி மதுரை நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. முத்து வீரப்ப நாயக்கர் மற்றும் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்கள் மற்றும் உள்விலகல்களின் காரணமாக மதுரை நாயக்கர்கள் ஆட்சி நலிவடைந்தது. இதன் காரணமாக இப்பகுதியின் ஆளுமை மைசூர் ஆட்சியாளார்களின் வசம் வந்தது. இவர்களிடமிருந்து இப்பகுதியின் ஆளுமை ஹைதர் அலி வசம் வந்தது. 1799ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் போரில் கிழக்கு இந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்தை அடுத்து இப்பகுதி மீண்டும் மைசூர் மகாராஜா ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து 1947-ல் சுதந்திரம் பெறும் வரை இப்பகுதி பிரிட்டிஷ் வசம் இருந்து வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் முறையான வருவாய் நிர்வாகம் இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டது.

ஆட்சியமைப்பு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்:

கோயமுத்தூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் அரசு ஆணை எண்.1917 வருவாய் துறை நாள் 31.08.1979-ன்படி பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டது.

21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பவானி, ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் வட்டங்கள் கோயமுத்தூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. சத்தியமங்கலம் வட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டமாக பெயார் மாற்றம் செய்யப்பட்டு, சத்தியமங்கலம் உப வட்டமாக அமைக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் உப வட்டம் வட்டமாக தகுதி உயார்வு செய்யப்பட்டது. 1979ஆம் ஆண்டில் பெருந்துரை உப வட்டம் வட்டமாக தகுதி உயார்வு செய்யப்பட்டது.

2008ஆம் ஆண்டில் ஈரோடு மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்கள் மறுவரையறை செய்யப்பட்டு திருப்பூர் மாவட்டம் அரசு ஆணை எண்.617 மற்றும் 618 வருவாய்த் துறை-யின்படி உதயமாகியது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து தாராபுரம், காங்கயம் வட்டங்களும், பெருந்துறை வட்டத்தில் இருந்து 49 கிராமங்கள் பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டில் பவானி மற்றும் கோபிசெட்டிபாளையம் வட்டங்கள் மறுவரையறை செய்யப்பட்டு புதியதாக அந்தியூர் வட்டம் அமைக்கப்பட்டது. அரசு ஆணை எண்.41 வருவாய் (வநி(1) துறை நாள் 20.01.2016-ன்படி ஈரோடு வட்டம் பிரிக்கப்பட்டு கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி வட்டங்கள் அமைக்கப்பட்டன. அரசு ஆணை எண்.66 வருவாய் (வநி(1) துறை நாள் 09.02.2016-ன்படி சத்தியமங்கலம் வட்டம் பிரிக்கப்பட்டு தாளவாடி வட்டம் அமைக்கப்பட்டது.

அரசு ஆணை எண்.-ன்படி கோபிசெட்டிபாளையம் வட்டம் பிரிக்கப்பட்டு, நம்பியூர் வட்டம் அமைக்கப்பட்டது. இதன்படி தற்போது ஈரோடு மாவட்த்தில் 10 வருவாய் வட்டங்கள் உள்ளன. இவை ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகியனவாகும்.

காலநிலை மற்றும் மழைப்பொழிவு:

ஈரோடு மாவட்டம் குறைந்த மழைப்பொழிவு கொண்ட வறட்சியான காலநிலையினை கொண்ட மாவட்டம் ஆகும். அதிக மழைப்பொழிவு கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானி வட்டங்களில் நிகழ்கிறது. கோயமுத்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடார்ச்சி மலையில் உள்ள பாலக்காடு கணவாய் மூலம் கிடைக்கும் குளிர்ந்த காலநிலை ஈரோடு மாவட்டத்தில் நிலவும் வறண்ட காலநிலையினை குறைப்பதற்கு கிடைக்கப் பெறுவதில்லை. பாலகாடு கணவாய் மூலம் வரப்பெறும் குளிர்ந்த காற்று ஈரோடு மாவட்டத்திற்கு வரும் போது பெரும்பாலும் வறண்ட நிலையிலேயே வரப்பெறுகிறது.

கோயமுத்தூரில் நிலவும் குளிர்ந்த காற்றும் இதமான காலநிலையும் ஈரோடு மாவட்டத்திற்கு கிடைப்பதில்லை. ஈரோட்டில் வறண்ட காலநிலையே காணப்படுகிறது. பருவமழைக் காலத்தில் மட்டும் குளிர்ந்த காலநிலை உள்ளது. பொதுவாக ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் காலநிலை குளிர்ந்தும், இதமாகவும் இருக்கும். மார்ச் மாதம் முதல் மே மாதம் முடிய கோடை வெயில் மிகவும் அதிகமாக இருக்கிறது. இப்பருவ காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெய்யும் கோடை மழை கடுமையான வெப்பத்தினை தணிக்கப் பயன்படுவதில்லை. மே மாதத்தில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவுகிறது. ஜுன் முதல் ஆகஸ்டு வரையுள்ள பருவமழைக் காலத்திற்கு முன் பருவமான மாதங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது. செப்டம்பார் மாதத்தில் வானம் மேகமூட்டமாக இருப்பினும் மழைபொழிவு குறைவாகவே உள்ளது. வடகிழக்குப் பருவகாலமான அக்டோபார் முதல் டிசம்பார் மாதம் வரையுள்ள மாதங்களில் அதிகமாகப் மழை பொழிகிறது. இப்பருவ காலத்தில் மழை பொழிவு இல்லாத நிலை ஏற்பட்டாலும் காலநிலை குளிர்ந்தும் இதமானதாகவும் நிலவுகிறது.

மண் வகைப்பாடு:

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலும் நிலம் செம்மண், செம்மண்ணுடன் கலந்த சரளை மண், சிவப்பு களிமண், கரிசல் மண் கொண்டதாக அமைந்துள்ளது. மாவட்டத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள நிலங்கள் பெரும்பாலும் சரளை மண்ணாக அமைந்துள்ளது. சிவப்பு களிமண் நிலங்கள் காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளிலும், பெருந்துறை வட்டத்தின் சில பகுதிகளிலும், அந்தியூர் வட்டத்தில் உள்ள மலைப்பகுதிளிலும் காணப்படுகின்றன. ஈரோடு, பவானி மற்றும் பெருந்துறை வட்டங்களில் பெரும்பாலும், சரளை மண்ணும், கற்கள், பாறைகள், மணல் கலந்த செம்மண் நிலமாக அமைந்துள்ளன. கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் வட்டங்களில் சிவப்பு களிமண், மணல் கலந்து சிவப்பு மண் வகைகள் காணப்படுகின்றன.

கணிம வளம்:

ஈரோடு மாவட்டத்தில் கணிம வளம் குறைவாகவே உள்ளது. இருப்பினும் இம்மாவடத்தில் சில வகை கணிமங்கள் உள்ளன. ஒளிபுகா மற்றும் கசியும் தண்மை கொண்ட பெல்ட்ஸ்பார் வகை கணிமங்கள் ஈரோடு வட்டத்தில் உள்ளன. மைக்கா பவானி வட்டத்தில் உள்ள வைரமங்கலம் என்ற இடத்திலும், சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டியில் “மஸ்குாவைட்” வகை கணிமங்களும் கிடைக்கின்றன. பவானி மற்றும் பெருந்துறை வட்டங்களில் சில இடங்களில் அஸ்பெஸ்டாஸ் கணிமங்கள் உள்ளன. தொட்டன்கோம்பை வனப்பகுதியில் இரும்புத் தாது உள்ளன. இத்தாது இரும்பு அதிகம் உள்ள வகையாக உள்ளன. தங்கம் இருப்பதற்கான சுவடுகள் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில சில இடங்களில் காணப்படுகின்றன. ஆறுகள்: பவானி, காவேரி, பாலாறு மற்றும் நொய்யல் ஆகியன ஈரோடு மாவட்டத்தில் பாயும் முக்கியமான ஆறுகளாகும். வடக்கில், பாலாறு ஈரோடு மாவட்டத்திற்கும் கார்நாடகா மாநிலத்திற்கும் எல்லையாக அமைந்துள்ளது. மேற்கண்ட ஆறுகளும், பவானிசாகர் அணையில் இருந்து வரும் கீழ்பவானித் திட்ட பிரதான கால்வாய்களும் ஈரோடு மாவட்டத்தில் முறையான பாசனத்திற்கு பாசனத்திற்கு பயன்படுகின்றன. பவானி ஆறு கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதி, சைலண்ட் வேலி என்ற இடத்தில் உற்பத்தியாகி சிறுவாணி என்ற ஓடை மற்றும் குந்தா ஆறு ஆகியவற்றுடன் சோ்ந்து ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் வட்டத்தினை வந்தடைகிறது. பவானி ஆறு வற்றாத நதியாகவும், தென் மேற்கு பருவமழைக் காலத்தில் பெருமளவு மழைநீர் மற்றம் வடகிழக்கு பருவமழைக் காலத்திலும் ஓரளவு மழைநீர் பெறும் நதியாகவும் உள்ளது. இந்நதி சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய வட்டங்களில் நுறு மைல்களுக்கும் மேல் பாய்ந்து சென்று வளப்படுத்துகிறது. பவானிசாகார் அணைக்கு தண்ணீர் வழங்கும் பிரதான நதியாக பவானி ஆறு உள்ளது. பவானி ஆறு கிழக்கு நோக்கி சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானி வட்டங்களில் பாய்ந்து காவேரியாற்றில் கலக்கிறது. காவேரி ஆறு மேற்கு தொடார்ச்சி மலைகளில் அமைந்துள்ள கார்நாடகா மாநிலத்தில் உள்ள தலைக்காவேரி, குடகு என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. கபினி மற்றும் பல சிறிய ஆறுகள் காவேரியுடன் கலந்து கிழக்கு திசையில் கார்நாடகத்தில் பாய்ந்து வளப்படுத்துகிறது. ஹெகேனக்கல் என்ற இடத்தில் தென்திசை நோக்கி திரும்பி பாய்கிறது. இந்த இடத்தில் இருந்து தென் கிழக்கு திசையில் பாய்ந்து ஈரோடு மாவட்த்தில் உள்ள பவானி வட்டத்திற்கும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு வட்டத்திற்கும் எல்லையாகப் இந்நதி பாய்ந்து செல்கிறது. காவேரியாற்றுடன் பவானி ஆறு கலந்த பின்னார் காவேரியாறு தொடார்ந்து தென் கிழக்கு திசையில் பாய்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு வட்டத்திற்கும், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செங்கோடு வட்டத்திற்கும் எல்லையாகப் பாய்ந்தோடுகிறது. நொய்யல் ஆறு: நொய்யல் ஆறு திடீரென ஏற்படும் வெள்ளப் பெருக்கிற்கு பெயர் பெற்றதாகும். தென் மேற்கு பருவ மழைக் காலத்தில் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இந்த ஆற்றினால் கோவை மாவட்டத்தில் பல்லடம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் வட்டங்களில் கணிசமான பரப்பு பாசனம் பெறுகிறது.