சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் அவர்களது கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மொத்த பரப்பு 2276.75.20 ச.கி.மீ.-ல் ஈரோடு வனக்கோட்டம் (82/144.32 ஹெக்டேர்), சத்தியமங்கலம் வனக்கோட்டம் (88/131.56 ஹெக்டேர்) மற்றும் ஆசனூர் வனக்கோட்டம் (57/399.36 ஹெக்டேர்) ஆகிய கோட்டங்கள் உள்ளன. இதில் சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் இரு கோட்டங்களும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்டவையாகும். ஈரோடு மாவட்டத்திலுள்ள இதர வனப்பரப்புகள் அனைத்தும் ஈரோடு மாவட்ட வன அலுவலரது கட்டுப்பாட்டின்கீழ் உள்ளவையாகும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கிழக்கே ஈரோடு வனக்கோட்ட எல்லையையும், தென்மேற்கே நீலகிரி வடக்குக் கோட்ட எல்லையினையும், வட மேற்கே கர்நாடகாவின் மாதேஸ்வரன் மலை வன உயிரின சரணாலயத்தையும், தெற்கே நீலகிரி வடக்குக் கோட்டம் மற்றும் கோயமுத்தூர் கோட்ட எல்லைகளையும், வடக்கே கர்நாடகாவின் பிலிகிரி ரங்கசாமி புலிகள் காப்பகத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது.
ஈரோடு வனக்கோட்டத்தின் கிழக்கே கர்நாடாக மாநில கொள்ளேகால் கோட்டமும், கிழக்கே சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களும், மேற்கே சத்தியமங்கலம் கோட்டமும் மற்றும் தெற்கே திருப்பூர் மாவட்டமும் அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டுப்பன்றிகள், காட்டு மாடுகள், மான்கள் போன்ற வன உயிரினங்களும் மற்றும் இதர வகை அரிய வகை வன உயிரினங்களும் வாழ்கின்றன. புலிகள் அதிகமாக காணப்படும் இச்சரணலாயமானது பிலிகிரி ராமசாமி புலிகள் சரணாலயம், பந்திப்பூர் புலிகள் சரணாலயம், முதுமலை புலிகள் சரணாலயம் மற்றும் நாகர்ஹாலே புலிகள் சரணாலயம் ஆகியவற்றினை ஒருங்கிணைத்து கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பகுதியாகும்.
மேலும், அரிய வகையான தாவரங்கள், புவியியல் சார்ந்த பகுதிகள், இயற்கையான சூழ ஓர் சிறந்த சுற்றுலாத்தலமாக ஈரோடு மாவட்டத்தில் அமைய பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் வெப்ப மண்டல உலர் முள் காடுகள், வெப்ப மண்டல உலர் கலப்பு இலையுதிர் காடுகள், வெப்ப மண்டல மித பசுமை காடுகள், உப வெப்ப மண்டல மலை காடுகள் மற்றும் மலைக் காடுகள் ஆகிய வன வகைகளும், வறண்ட நிலத்தாவரங்கள், அடர் முள் புதர்கள் மற்றும் பசுமை மாறா காடுகளுடன் பரந்து விரிந்து காணப்படுகின்றன.
வனம் சார் பழங்குடியினர்
ஈரோடு மாவட்டத்திலுள்ள 15 வன பழங்குடியின கிராமங்களில், 6 கிராமங்கள் ஈரோடு வனக்கோட்டத்தைச் சார்ந்ததாகும். மீதமுள்ள, 9 வன பழங்குடியின கிராமங்களும் மற்றும் 19 வருவாய் கிராமங்களும் சத்தியமங்கலம் வனக்கோட்டத்தைச் சார்ந்தவையாகும்.
சந்தன மர கிடங்கு
ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் சந்தன மரக்கிடங்கு அமைந்துள்ளது. இம்மரக்கிடங்கில் இயற்கையாக வனப்பகுதியில் வளர்ந்து பேரிடர் நிகழ்வுகளில் கீழே விழும் மரங்கள், பொதுமக்களால் நல்ல முறையில் வளர்க்கப்பட்டு பெறப்படும் மரங்கள் மற்றும் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்படும் சந்தன மரங்கள் ஆகியவை இருப்பில் கொண்டு வரப்பட்டு, அரசு மூலம் அரசாணைகள் வெளியிடப்பட்டு மொத்த விற்பனையாக விற்கப்படுகின்றன.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஆகும். ஈரோடு மாவட்டத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் ஈரோடு-சென்னிமலை சாலையில் வடமுகம் வெள்ளோடு கிராமத்தின் பெரியகுளம் ஏரியை மையமாக கொண்டு 77.185 ஹெக்டேர் பரப்பளவில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இப்பெரியகுளம் ஏரியானது வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், 1972 பிரிவு 26 (1) மூலம் அரசாணை எண் 44 சுற்றுச்சூழல் (ம) வனத்(வனம்-5)துறை, நாள் 29-02-2000ன்படி வெள்ளோடு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
வருடந்தோறும் பருவ காலம் தொடங்கியவுடன் வெளிநாடுகளிலிருந்து பல இன வகையான பறவைகள் வலசை புரிந்து சரணாலயப்பகுதிகளில் தங்குகின்றன. சரணாலயத்தினை கண்டு ரசித்திட வெளி மாவட்டங்களிலிருந்து பல சுற்றுலாப் பயணிகள் வருகின்றன.
இச்சரணாலயப்பகுதியில் அமைந்துள்ள ஏரியின் மூலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் பயன் பெறுகின்றன.
வண்ணபூரணி சுற்றுலா திட்டம்
ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனத்துறை மூலம் வண்ணபூரணி சுற்றுலா திட்டம் 6 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் சுற்றுலாப் பயணிகள் துறை மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள வாகனத்தின் வாயிலாக இயற்கையை கண்டுகளிக்க வனப்பகுதிகளுக்குள் அழைத்து செல்லப்படுகின்றன. அதற்கான கட்டணத்தொகை பற்றி முழு விவரங்கள் அனைத்தும் https://www.str-tn.org.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.